“தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால் காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும். இறுதியாக இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவேண்டும்” என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் (Item 5 : Human rights bodies and mechanism – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் ஏபிசி தமிழ் ஒலி அமைப்பின் தமிழ் ஒலி ( ABC Tamil Oli ) என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய கயீவன் அய்யாதுரை தனது உரையில் தெரிவித்தவை வருமாறு;










