எம்மைப்பற்றி
தமிழர் இயக்கம்
தமிழர்கள் இவ்வுலகில் பலவேறு நாடுகளில் பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து வியாபித்து வாழ்கின்றார்கள். இற்றைக்கு ஐம்பாதியிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையும் பெருமையும்வாய்ந்த தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் விழுமியங்களையும்கொண்ட, அறிவியலையும் வீரத்தையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டி முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி அர்ப்பணம் செய்த இவ்வுயரிய இனம் இன்று உலகெங்கும் அகதியாக அடிமையாக ஏதுமற்ற ஏதிலிகளாக நாடோடிகளாக வேரறுந்து இனக்கலப்படைந்து வாழ்கின்றது. பௌத்த பேரினவாத சக்திகளின் கொள்கைகளினாலும், காலனித்துவ அடக்குமுறையாளர்களினாலும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஏதிலிகளாக்கப்பட்டார்கள். இன்றும் உலகின் பல பாகங்களில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள். திட்டமிட்ட வடிவமைக்கப்பட்ட ஓர் இனவழிப்பிற்கும் உள்ளாகப்படுகின்றார்கள். தமிழர் தாயகமான தமிழீழத்தில் 2009 வரை இடம்பெற்றதும் அதனைத்தொடரந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சிபீடமேறிய சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படுவது திட்டமிட்ட தமிழின அழிப்பேயாகும். இதுவே எமது நிலைப்பாடாகும்.
தமிழீழம் என்பது இன்றைய பூகோள அரசியல் ஒழுங்கில் தமிழகத்திற்கு அடுத்ததான தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்று மரபுவழிவந்த தாயகமாகும். இத்தகைய பெறுமதிமிக்க உன்னதமான உயரிய எம் தாயகத்தை அன்னிய சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எமது பேரம்பேசும் சக்தியையும் இறையாண்மையையும் கட்டியமைத்து நிர்வாகம் செய்த எம் தமீழீழ நிகழ் அரசை தமது பூகோள நலன்களுக்காக பிராந்திய நாடுகளும் வல்லரசுகளும் அழிக்க திட்டமிட்டார்கள். இலங்கைத்தீவில் தமது நலன்களுக்கேற்ப ஒற்றை ஆட்சியை அமைத்து தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை இல்லாமல் செய்யவே பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசுகளும் இன்னும்பல நாடுகளும் தமது நலன்களுக்காக சிங்கள பேரினவாத அரசிற்கு முண்டுகொடுத்து போட்டி போட்டு தமிழர்களை அழித்து எம் கட்டுமானங்களை சிதைத்தார்கள். மேலும் தாய்த் தமிழகத்திலும் தமிழர்களை அடக்கியொடுக்குவது இன்று நாளாந்த நடவடிக்கையாகிவிட்டது.
திட்டமிட்ட இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட எமது தமிழீழத்தின் இறையாண்மையை பேரம்பேசுதலுக்கிடமற்ற எமது தொடரச்சியான போராட்டங்களின் ஊடாக மீட்டெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுதலும் உலகெங்கும் பரந்துவாழும் 12 கோடி தமிழர்களின் உரிமைகளுக்காக வினைத்திறனுடன் போராடுவதே எமது உயரிய நோக்கமாகும்.
- சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தனித் தமிழீழ நாடொன்றே தமிழ் மக்களின் ஏகோபித்த ஒரே தீர்வென்று பேரம்பேசுதலுக்கிடமற்று” நந்திக்கடல் கோட்பாட்டில் ” விட்டுக்கொடுப்பற்று ” பொதுவுடமை தன்னாட்சி தமிழீழத்தை“அடைய புரட்சிகர விடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினரும் எம்முடன் இணைந்து கைகோர்த்து ஒன்றுபட்ட சக்தியாக பயணிக்கலாம்.
- தமிழீழம் என்ற தேவை 12 கோடி தமிழர்களினதும் ஒட்டுமொத்த தேவை என்ற அடிப்படையான புரிதலை தமிழ்மக்கள் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் கொண்டுபோய்சேர்பதும் அதனூடாக 12 கோடி தமிழர்களும் சங்கமிக்கும் மாபெரும் தமிழ்தேசிய அரசியலை கட்டியமைப்பதும் , கட்டிக்காப்பதும் எமது உயரிய இலக்காகும்.
- இதனூடாக அறிவும்,வீரமும்,விவேகமும் நிறைந்த புரட்சிகரமான சனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்தும் சர்வதேச பரிமானத்தை உருவாக்குவதுமே எமது கொள்கையாகும்.
- உலகளாவிய ரீதியில் விடுதலைக்காகவும்,அடிப்படை அரசியல் உரிமைகளுக்காகவும் போராடும் அனைவருடனும் நாம் கரம்கோர்த்து பயணிப்போம்.
- தமிழர்களுடையகலை, பண்பாடு,அரசியல், பொருளாதாரம், வரலாறு, ஒழுக்கநெறி, மொழி, தமிழர்தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படைரீதியான அனைத்து மேம்பாடுகளுக்காகவும் நாம் உரத்துக்குரல்கொடுப்போம்.
எமது வேலைத் திட்டங்கள் அனைத்தையும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.tamilmovement.com இல் அறிந்துகொள்ளலாம்.
தமிழர் இயக்கத்தின் அரசியல் வேலைத்திட்டம்
எமது கொள்கைகள்
- தமிழர் இயக்கம் ஈழத்தமிழர்களின் அபிலாசைகளையும், தேசிய நலனையும் கருத்தில்கொண்டு ஒரு வேலைத்திட்ட நிகழச்சி நிரலை வகுத்துக்கொள்ளும்.
- இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம்.
- தனித்துவமான இனம் என்ற அடிப்படையிலும் அதற்கான தேவைப்பாடுகளான மொழி, கலைபண்பாடு, பொருண்மியமேம்பாடு, நிலம் தொண்மையான நீண்ட வரலாறு என்பன தனித்துவமாக இருக்கின்றது என்ற அடிப்படையில் தமிழர்கள் “சுயநிர்ணய உரிமை” கொண்டவர்கள்.
- இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு (தமிழீழத்தின் வடக்கு தெற்கு) ஈழத்தமிழர்களின் பூர்வீக தொண்மையான மறுக்கமுடியாத தாயகம் என்பதால் தமிழர்கள் இப்பராம்பரிய தாயகத்திற்கு என்றும் உரித்துடையவர்கள்.
- தமிழர்தாயகமானதுதனதுஇறையாண்மையைஇலங்கைசிங்களஅரசிடம்ஒருபோதும்ஒப்படைக்கவில்லை. அந்தவகையில் தமிழர்களின் “இறையாண்மை” தமிழ் தேசிய அரசின் மூலம் மீளுருவாக்கம் பெற வேண்டும். இருப்பினும் இம்முடிவானது எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் முழுமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு நோக்கிய முயற்சிகளுக்கு தடையாக ஒருபோதும் அமையாது.
- எம் தாயகமான வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழத்தை அடைவதற்கான வன்முறைகளற்ற சனநாயக வழிகளை ஊக்குவித்தல்.
- பௌத்த சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கும். இனப்படுகொலைக்கும் எதிரான போரில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் செய்த அளப்பரிய அளப்பெரிய அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் மதிப்பளித்துச் செயற்படுதல்.
- தமிழர்இயக்கம்கீழ்வரும்அடிப்படைகளில்ஈழத்தமிழரின்தமிழீழஅரசிற்கானகட்டுமானபணிகளைஅங்கீகரிக்கவேண்டும்:அ) மதச்சார்பற்ற, ஆ) நேரடியான வெளிப்படை சனநாயகம், இ) பொதுவுடமை(சமதர்மம்), ஈ) சட்டவாட்சியை உறுதிப்படுத்தல்
- இலங்கையின் மனிதவிரோத, மனிததர்மத்திற்கு அப்பாற்பட்ட, சட்டங்களையும் தமிழர்கள்மீதான இராணுவ அடக்குமுறைகளை உட்கிடையாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்து தமிழின அழிப்பிற்கு ஒத்தாசை வழங்கி வருகின்ற ஆயுதக்குழுக்கள் மற்றும் கட்சிகளில் இருந்து முற்றாகவே விலகி நிற்றல்.
- தமிழர் இயக்கம் ஈழத்தமிழர்களின் வரலாற்று இலட்சினைகளை ஏற்று அதைத் தொடர்ந்து பேணுவதற்கு ஊக்கமளிக்கும்.
- தமிழர் இயக்கமானது அனைத்துலக சமூகம் தமிழீழத்தை அங்கீகரிக்கவும் ஏற்க செய்யவும் திடசங்கற்பம் பூண்டு உறுதியுடன் நிற்பதோடு தமிழர்களது “சுயநிர்ணய” உரிமைக்கோரிக்கையை கைவிடுமாறு கோரும் முயற்சிகளுக்கும் அழுத்தங்களிற்கும் மிகவலுவான எதிர்பபை காட்டி எதிராக போராடும்.
தமிழர் தாயகத்தின் இன்றைய நிலை
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் மிகவும் கொடூரமானதும் மனிததர்மத்திற்கு எதிரானதுமானதிட்டமிட்ட தமிழின அழிப்பு இன்றும் ஓரு ஒழுங்கில் இலங்கை அரசால் மிகக்கசட்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றது.
- தமிழர் தாயகத்தை சிங்கள இராணுவமயமாக்குதல்
- நில அபகரிப்பு
- பெண்கள் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள், மற்றும் பாலியல் வல்லுறவுக்கு அடிமைப்படுத்தல்
- கருத்துவெளியிடும்சுதந்திரமின்மை, ஊடக சுதந்திரமின்மை
- திட்டமிட்டு சமுகச்சீரழிவுகளுக்கு ஊக்கபடுத்தல்
- ஆட்கடத்தல், காணாமல்போதல் கொலை
- மாற்றுக்கருத்தாளர்கள் மீதான உயிர் அச்சுறுத்தல்
- திட்டமிட்டகருக்கலைப்புமற்றும்இனவிருத்தியைமுடக்கும்செயற்திட்டங்கள்
- திட்டமிட்டசிங்களகுடியேற்றங்கள், தமிழர்களின் மூலத்தோற்றுவாய்கள் வரலாறுகளை உண்மைக்கு மாறாக எடுத்துரைத்தல்
- தமிழர் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிதைத்தல்
- தமிழர் பாரம்பரிய பிரதேசங்களுக்கு சிங்கள பெயர்கள் மாற்றப்படுவதன் மூலம் சிங்களமயமாக்கல்
- எம் தாயகப்பிரதேசத்திலும் மற்றும் முழு இலங்கையிலும் கல்வித்திட்டங்களிலும் பாடவிதானங்களிலும் தமிழர்கள் தொடர்பான உண்மை வரலாற்றை மறைத்து திரிபுபடுத்தி பொய்யான வரலாற்றை கற்பித்தல் செயற்பாட்டின் ஊடாக மாணவர்களுக்கு திணித்தல்
- மது மற்றும் போதைப்பொருட்களை மறைமுகமாக திட்டமிட்டு மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி அதற்கு அடிமையாக்கி எம் சமூகத்தினை சீர்குலைத்தல்
இவ்விதம் தமிழர்களை கொலை செய்வதற்கு நிகரான சமூக கட்டமைப்புக்குலைவை ஏற்படுத்தி நம் இனத்தைவேரறுத்து எம் எதிர்கால தலைமுறையினரை சிங்களவராக படிப்படியாக கருதவைத்து காலவோட்டத்தில்தமிழினத்தை முழுச்சிங்கள இனமாகவே மாற்றி தமிழர்களை வேரோடு அழித்துவருவதை ஓர் கட்டமைக்கப்பட்டஇனப்படுகொலையாகவே நாம் வரையறுக்கின்றோம். இதுவே எம் தாயகத்தில் நாம் காணும் நிதர்சனமானநிகழ்வுகளாகும்.
தமிழீழம் சார்ந்த நிலைப்பாடு
தேசிய அரசாக விளையும் சக்தி (aspiring nation – state) என்ற அடிப்படையில் நாம் இலங்கைத்தீவில் இரண்டு தேசங்களுக்கிடையேயான ஒரு தீர்வை முன்மொழியுமாறு சர்வதேச சமூகத்தைக் கோரலாமே அன்̀றி நாமாக சமஷ்டி என்றோ, அதிகாரப்பகிர்வு என்றோ அல்லது தெளிவற்ற கோட்பாடுகளை முன்வைத்தோ கொள்கைப்பிரகடனம் செய்வது பொருத்தமற்றது. இறைமையும் சுதந்திரமும் பொருந்திய தனியரசே தமிழரின் அரசியல் வேணவா. இதுவே தமிழர் விரும்பும் தீர்வு. இந்த வேணவாவிற்கு முரணான தீர்வுத்திட்டங்களை தாயகத்தில் எமது அரசியற்கட்சிகள் முன்வைக்கவேண்டிய அவசியம் உண்மையில் இல்லை. ஆனால் தமிழர்கள் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதென்றால் எவ்வாறானதொரு திட்டத்தை முன்வைக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசியம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த நிலையில் இரண்டு தேசியங்கள் தத்தமக்கேயுரித்தான முழுமையான இறைமையைச் சம தகுதியுடன் பேணக்கூடிய ஒரு தீர்வு முறையைப் பற்றியே குறைந்தபட்சமாக நாம் கருத்து முன்வைக்கலாம். எமது குறைந்தபட்சத் தீர்வாக தமிழ் இறைமையைச் சரணாகதியாக்காத இரண்டு அரசுகளின் கூட்டுமுறை (confederacy) பற்றியே கருத்து முன்வைக்கலாம்.
சமஷ்டி (federation) என்பது வேறு அரசுகளின் கூட்டு (confederation) என்பது வேறு தனிநாடு என்பதற்குக் குறைந்த படியாக அரசுகளின் கூட்டு என்பதை ஒரு திட்டவட்டமான வடிவமாக தமிழ் இறைமையைச் சமரசம் செய்யாததாக அமைகிறது. அதனிலும் குறைந்ததாகவே சமஷ்டியின் ஏனைய வடிவங்கள் அமையும். எனவே நாமாகத் தீர்வுத்திட்டம் எதையும் வரையவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது இரண்டு அரசுகளின் கூட்டுவடிவமான (confederation) முறையாகவே அமைவது பொருத்தம்.
நாம் முன்வைக்க முற்படும் வேறெந்தத் தீர்வு முறையும் சிறீலங்கா அரசு என்ற கோட்பாட்டை நாம் அங்கீகரிப்பதாகவும் அமையும் என்பதால் அவ்வாறான திட்டங்களை நாமே முன்வைப்பது எமது இறைமையை நாமாகவே சரணாகதியாக்கும் சட்டரீதியான செயற்பாடாகிவிடும். நடுநிலை வகிக்க வரும் எவரேனும் தாமாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதங்களை வழங்குமிடத்து அத் தீர்வுத்திட்டம் குறித்து பரிசீலிக்க நாம் தயாராக இருப்போம் என்று தெரிவித்துவிட்டு சர்வதேச சமூகத்தின் பொறுப்பைச் சுட்டிக்காட்டும் நிலைப்பாட்டை எடுப்பதே தற்போதைய நிலையில் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சர்வதேச சமூகம் சிறீலங்காவின் போக்குகளைக் கண்டு வெதும்பிப்போயிருக்கும் இச்சூழ்நிலையில் யாரோ எவரையோ காப்பாற்றுவதற்காக ஒஸ்லோப் பந்தை எமது சட்டைப்பைக்குக்குள் வைத்துவிட்டுத் திசைதிருப்ப முற்படுகிறார்கள். முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ் மக்களையும் காக்கும் தார்மீகக் கடமை சர்வதேச சமூகத்தினது பொறுப்பாகும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.
ஈழத்தமிழரின் இறைமைக்காகக் குரல் கொடுப்பவர்களாக புலம் பெயர் தமிழர்களும் ஒட்டுமொத்தமான உலகத்தமிழர்களும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். மேற்குறித்த இரண்டு முனைகளில் செயலூக்கத்துக்கான கொள்கைரீதியான அடிப்படைகளைத் தாயகத்திலிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் அவர்களுக்கிருக்கும் வரம்புகளுக்குள்ளும் நெருக்கடிகளுக்குள்ளும் நின்றபடியே நுட்பமாக முன்வைக்க முடியும்.
மனிதாபிமானத் தலையீடு (humanitarian intervention) என்ற பொறுப்பையே சரிவரச் செய்யமுடியாத நிலையிலிருந்த சர்வதேச சமூகம் பாதுகாப்பிற்கான பொறுப்புரிமை (The Responsibility to Protect,R2) என்ற அடிப்படையில் சிறிலங்காவின் அரச இறைமையைப் பொருட்படுத்தாது தலையீடு செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்று கூடத் தார்மீக ரீதியான கோரிக்கையை நாம் முன்வைக்கலாம்.
தமிழ் இறைமையைப் பற்றி பேசத் தயங்குகிறவர்கள் பாதுகாப்புக்கவசம் ஏதுமின்றியிருக்கும் தமிழர்களை சிறீலங்காவின் அரச இறைமை எவ்வாறு பாதிக்கிறதென்றாவது குரல் கொடுக்கலாம். தமிழ் இறைமையின் அடிப்படைகளில் ஒன்று அதன் புவியியல் ஒருமைப்பாடு (territorial integrity) ஈழத்தமிழரின் பாரம்பரிய தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாடு பற்றிச் அக்கறை காட்டவேண்டிய காலமிது. தமிழ் இறைமையைக் கைவிடுவதற்கான அழுத்தங்கள் எதையும் எம்மீது திணிக்காது தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாடு குறித்த நிலைப்பாட்டை இந்தியாவும் சர்வதேச சமூகமும் பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும் என்று நாம் கேட்கவேண்டியது உடனடித் தேவையாகும், தவிரவும் தாயக மக்களின் மீள்குடியேற்றம், இராணுவ மயமாக்கலை அகற்றுதல் போன்ற உடனடிக் கவனத்திற்குரிய விடயங்களை முன்னிலைப்படுத்தவேண்டிய தருணமிது.
புலம்பெயர் மக்களும் தமிழ்த்தேசியத்தின் ஓர் அங்கம் என்பதை 40 வருடங்களுக்கு முன்பே வட்டுக்கோட்டைத் தீர்மானம் அடையாளம் கண்டது. இன்று கணிசமான எமது மக்கள் நாட்டைவிட்டு நெருக்கடியான இராணுவச்சூழலால் வெளியேறியிருக்கும் நிலையில் ஈழ தமிழ்த்தேசியத்தின் ஓர் காத்திரமான அங்கமாயிருக்கும் அவர்களின் அரசியல் முக்கியத்துவத்திற்கு முன்னரை விடவும் பாரிய பரிமாணம் இருக்கிறது. புலம்பெயர் மக்களின் இந்த முக்கியத்துவத்தைச் சர்வதேச சமூகம் தெளிவாகவே இனங்கண்டுள்ளது. அதுமட்டுமல்ல ஈழத்தமிழரின் இறைமையை இன்றைய சூழலில் புதிய பரிமாணத்தில் சனநாயக ரீதியில் பிரதிபலிப்பவர்களாக புலம்பெயர் ஈழத்தமிழரே விளங்குகிறார்கள் என்பதை 2009 மே-10 தொடக்கம் அவர்கள் மேற்கொண்டுவரும் சனநாயகரீதியான பொதுவாக்கெடுப்புகள் நிறுவியுள்ளன. ஈழத் தமிழ்த் தேசியத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியற் தீர்வில் புலம்பெயர் மக்களும் இணையான பாத்திரதாரிகள் என்பதைத் தாயகத்தின் எமது சொந்த அரசியற் சக்திகள் முதலில் அங்கீகரிக்க முன்வரவேண்டும்.
இலங்கைத் தீவிலுள்ள 18 மில்லியன் சிங்களவர்களின் புவிசார் அரசியல் (geopolitics) தமிழர்களின் மெய்நடப்பு அரசை (de facto state) அழித்துவிட்டது. அதற்கு முன்னைய இரணுவப் பலச்சமநிலையை இனிமேலும் நாம் மீண்டும் அடைய முடியுமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த நிலையில்தான் தென்னாசியப் பிராந்தியத்தில் 80 மில்லியன் தமிழர்களின் நாடித்துடிப்பும் ஒரேவிதமாகவே துடிக்கிறது என்ற உண்மையை உணர்ந்த அரசியலை நாம் கட்டியெழுப்பவேண்டும் ஈழத்தமிழ் இறைமையின் மெய்நடப்பு அரசு தனது நிலப்பரப்பை அங்குலம் அங்குலமாய் இழந்து உலகத்தமிழரின் மனப்பரப்பினை கைப்பற்றியதன் விளைவினால் இந்தப் புதிய பரிமாணம் தோன்றியுள்ளது.
இந்த பரிமாணத்தில் புதியதொரு மெய்நடப்பு நிலைமையை நிறுவி தமிழ் புவிசார் அரசியலூடாக (Tamil geopolitics) ஈழத்தமிழரின் இறைமைப் போராட்டத்திற்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும். தாயகத்திலும் சரி புலத்திலும் சரி உலகத்தமிழர் மட்டத்திலும் சரி புதிய தலைமுறையின் அரசியல்வரவே இதை உறுதி செய்யும். தாயகத்தில் குழம்பியிருக்கும் மூத்த அரசியல்வாதிகளும், புலத்தில் இலக்கின்றி பயணிக்கும் குழுவாத சக்திகளும், தமிழகத்தில் வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் இயக்கத் தலைவர்களும் தலைமுறை மாற்றத்திற்கான காலம் வந்துவிட்டதை அங்கீகரித்துச்செயற்படவேண்டும். “கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடமிருந்தே உலக ஒழுங்கை மாற்றும் அடிப்படைத் தத்துவங்கள் உருவாகின்றன”.
தமிழ்த்தேசியம் தொடர்பில் எமது நிலைப்பாடும், எண்ணக்கருவும்
தமிழ் தேசியம் என்றால் அது
தமிழர்களுக்கான ஒரு தேசியம் அல்லது நாடு என்ற கருவுலத்தை அடிப்படையாக முன்வைத்தே கருதப்படுகின்றது. இக்கோட்பாட்டை பல்வேறு சூழ்நிலைகளிலும், பல்வேறு அரசியல் தளங்களிலும் வெவ்வேறு வழிகளில் பகுப்பாய்வு செய்த பலர் இது ஓர் பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் நிறைந்த ஓர் “கருத்துவம் ” என்றும் இதற்கு திடமானதும் நிலையானதுமான ஓர் வரைவிலக்கணம் கிடையாது என்றும் கருத்துக்களை வெளிப்பட்டுள்ளனர்.
இற்றைக்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமைவாய்ந்த, தமக்கென நீண்ட நெடிய வரலாற்றைக்கொண்ட இவ் மூத்தகுடிக்கு தனித்துவமான மொழி, பெருமைமிக்க ஓர் பண்பாட்டுமுறைமை, தனக்கே உரித்தான ஓர் நிலப்பகுதி, உன்னதமான ஓர் நீண்ட வரலாறு, ஓர் பொருண்மியமேம்பாடு மேலும் இவற்றிகான படிமுறைரீதியான கட்டமைப்புகள் எல்லாம் தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. இவற்றையெல்லாம் கொண்ட எம் தமிழினதிற்கு சர்வதேச சட்ட நியமங்களின்படி தம்மைத்தாமே ஆளுகின்ற “சுயநிரண்ய உரிமை” இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.” பொதுவுடமை தன்னாட்சி தாயக வடுதலை” தொடர்பிலான முற்போக்கான கருத்துக்களையும், அறம்சார்ந்த பண்புகளையும், நெறிமுறைகளையும், மரபுவழி வாழ்ந்த தாயகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தமிழினத்திற்கு தேசிய தோற்றப்பாடு அல்லது தமிழ் நாகரீகதோற்றுவாய் இல்லை என்று எண்ணுபவர்கள் தமது அறிவுசார் வெற்றிடத்தை தாமே தேடலூடாகவோ, அல்லது தாமாகவோ நிரப்பிகொள்ளல் வேண்டும்.
தமிழ் தேசியம் என்ற கருத்தியல்புகள் மரபுவழி தாயக நிலப்பரப்புகளான தமிழீழம், தமிழ்நாடும் உள்ளடங்குகின்றன. எதிர்பாராதவிதமாக தமிழீழம் முழுமையாக அன்னிய வல்லாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்புக்கள்ளும், தமிழ்நாடு இன்னொரு நாட்டின் மாநிலமாகவும் இன்று இருப்பதால் தமிழ்த்தேசியம் என்ற பெருமதிமிக்க கோட்பாடு இன்றைய பூகோள அரசியல் விதிகளின்படியும், பிராந்திய வல்லாதக்க சக்திகளின் நலன்கைள முன்வைத்தும் சவால் நிறைந்த ஓர் கருத்தியலாகவே அமைகிறது. இவ் அகச்சூழலின் பிரதிபலிப்பால் (பக்கவிளைவால்) தமிழ் தேசியத்தின் இன்றையநிலை மற்றுமோர் மாற்று புறச்சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உள்ளக, வெளியக சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அதுவே இழந்த எம் தேசங்களின் இறையாண்மையை மீட்கும் எம் போராட்டமாகவும், தமிழ்மக்களுக்கெதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழர் வாழும் தேசமெங்கும் எழுச்சி பெற்றுச்செல்லும் உணர்பூர்வமான செயலாகும்.
இவ் உயரிய சிந்தனையான பொது உணர்வுகளை மழுங்கடிக்கின்ற துவேச ஆதிக்க வன்முறை உணர்வுகளல்ல. தமிழ்தேசிய வரையறை என்பதே பொதுவுடமைக்கோட்பாடுகளின் அடிப்படையிலும், அடக்குமுறைகளுக்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளில் இருந்நு பிறப்பதுதான்.
இத்தகைய சூழலில் தமிழ்தேசியம்
என்பதை நாம் இழந்துபோன எம் தாய் நிலங்களை மீட்டு எடுக்கும் மீட்புபோராட்டமாகவும், அதேநேரம் எம்மீது தொடரப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட வடிவமாகவும் வரையறை செய்கின்றோம். இதனால் தமிழீழ தேசிய உணர்வையும், தமிழ்த்தேசிய உணர்வையும் பிரித்துப்பார்க்க முடியாது. இதனைப் பிரித்து பார்ப்பது குதிரையை வெள்ளைக்குதிரை கறுப்புக்குதிரை என்று வேறாக்கி பார்பதற்கு ஒப்பானது.
“தமிழிழ் தேசிய எழுச்சியே தமிழீழத்தின் மலர்ச்சி”
தமிழ்தேசிய எழுட்சியையும், மீள் எழுகையையும் அடக்குவதே தமிழினத்தை அடக்கி ஒடுக்கி அழிப்பதற்கான ஓர் மூலோபாயமாக தமிழின எதிர்ப்புவாதிகள் கையாளுகின்றனர். இதன் நிமிர்தமே தமிழ் எதிர்ப்பு வாதம் என்பதை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். மேலும் தமிழ் எதிர்ப்புவாதிகளின் ஒவ்வொரு தமிழ்விரோத நடவடிக்கைகளையும் முழுமையாக ஆட்சேபிக்கின்றோம்.
தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு அரசியல் மேம்பாடு.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர் தேசங்களில் நாம் எமக்கான தனித்துவங்களைப் பேணிப்பாதுகாத்த வாழ்ந்து வருகின்றோம். பல்வேறுபட்ட களச்சூழ்நிலைகள் சொல்லிலடங்கா பெரும் துயரங்கள் மத்தியிலும் எம்தமிழினம் வாழ்ந்து வருகின்றபோதும் கல்வித்துறையிலும் அறிவியல் நீரோட்டத்திலும் பெரும் சவால்களை சந்தித்தே பயணிக்கிறோம். இப்பெருமைக்கும் ,தனித்துவத்திற்குரிய இனமாகிய எம் தமிழினம் நாம் வாழுகின்ற பல்வேறு நாடுகளில் அந்நாடுகளில் அந்த நாட்டின் சமூக கலாச்சார பொருளாதார அறிவியல் மற்றும் அரசியல் விடயங்களில் கணிசமான பங்கெடுப்பை வழங்கி அவர்களுடன் சமூகரீதியில் இசைந்தொழுகி ஒருமித்து வாழ்வதை தமிழர் இயக்கம் ஊக்குவிக்கிறது. நமது தனித்துவங்களை பேணும் அதேவேளையில் நாம் வாழ்கின்ற நாட்டில் அச்சமூகத்துடன் இசைந்து ஒப்புரவாக வாழ்வதை நாம் முழு மனதோடு வரவேற்கின்றோம்.
இவைகள் சார்ந்த எம் செயற்பாடுகள்
- அரசியல் ஈடுபடும் எமது உறவுகளை ஊக்குவித்தல்.
- கல்வித்துறையில் ஊக்குவித்தல்.
- சட்டரீதியான உதவிகள்.
- அகதிகளுக்கான ஆலோசனை வழங்கி அறிவூட்டல்.
- மொழிபெயர்ப்பு.
- கருத்தரங்குகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றம் ஏனைய சமுகம்களுடன் இணைந்து வாழும் செயற்திட்டங்கள்.
- தமிழீழத்தை பிரதிபலிக்கும் தமிழர்கள் விடயமென்றால் அனைவரும் உடன அணுகக்கூடிய ஆவணப்படுத்தலுடன் கூடிய ஓர் காரியாலயத்தை அமைத்து செயற்படுவதே எமது முதன்மையான வேலைத்திட்டமாக உள்ளது. அவ்வாறான ஓர் தமிழர் மையத்தை தமிழீழ தூதுவராலயத்தை (இராசதந்திர வெளிநாட்டு தொடர்பகத்தை) நிறுவுவதற்கு தமிழ்மக்களின் உதவிகளை கோரி நிற்கின்றோம்.
எமது இலக்கும் தூரநோக்கமும்
- முழுமையான சுதந்திரம், இறைமையும், தன்னாட்சியுமுள்ள தமிழீழ அரசை நிறுவுதல்.
- தமிழர்களின் சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்தல்.
- தமிழர்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்தல்.
- தமிழர்களின் உண்மையான வரலாற்றை உலகறியச்செய்தல்.
- தமிழர்களின் சமூக அரசியல் பொருளாதார மற்றும் அறிவியல் மேம்பாட்டை ஊக்குவித்தல்.
- எமது தாயகம் தேசியம் ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் இருப்பதால் எம் தாயகத்திற்கு வெளியே எம் தேசிய கட்டமைப்புக்களை மீளுருவாக்கி எமது இனைத்தின் இருப்பையும் அடையாளங்களையும் எம் தேசம் நிறுவப்படும்வரை பாதுகாத்தல்.
இலக்கை நோக்கிய செயற்திட்டம்
- தமிழீழ அரசியலின் அனைத்துலக பரிமாணத்தை கட்டமைக்கும் முயற்சி. தமிழீழம் சார்ந்த அறிவியலையும் அதன் அத்தியாவசிய தேவைப்பாட்டையும் மற்றும் தமிழின அழிப்பையும் வெகுசன அமைப்புக்களுக்கும், மக்களுக்கும் தெளிவாக எடுத்தியம்புதல். அத்துடன் அனைத்துலகரீதியாக துறைசார் நிபுணத்துவம்கொண்ட அரசியல் முன்னெடுப்புகளையும் இராசந்திர செயற்பாடுகளையும் முன்னெடுத்தல், மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பில் "அகில ஆர்பரிப்பு" ஒன்றை உருவாக்கி அதன் வழியே நீதியை பெற அனைத்துலக சமூகத்தின் முன்னால் தமிழீழ அங்கீகாரத்தை நோக்கி பயணித்தல் எம் உயரிய இலக்காகும். இதற்காக நம்புதகமையான வழிகளை நாம் கொள்கைப்பிடிப்புடன் கையாளுவோம்.
- தமிழீழம் தொடர்பாக வெளியுறவுக்கொள்கை ((TEFP) ஒன்றை நிறுவி தமிழீழ அங்கீகாரத்துக்கான புறச்சூழலையும், ஏதுநிலைகளையும் உருவாக்குதல் மற்றும் அனைத்துலக விவகாரங்களை கையாளுதல்.
- தமிழீழத்தை மீட்டெடுப்பதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை தயாரித்தல் எமது செயற்திட்டங்கள் யாவும் (TENA) நோக்கியே இருக்கும்.
- 2009 வரைக்கும் நடைமுறை ரீதியாக எம் தாயகத்தில் ஆளுகைசெய்த தமிழீழ அரசை (இறையாண்மை பொருந்திய) அனைத்துலக தமிழ்மக்களின் ஆதரவுடன் பொருத்தமான ஓர் இடத்தில் நிறுவி நிர்வகித்தல்.
- ஏனெனில் தமிழர் தாயகம் முழுமையான சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் இருப்பதால் எம் இருப்பை காப்பதற்கும், தக்கவைப்பதற்கும் இது இன்றியமையாததாக உள்ளது.
- அரசியல் இராசதந்திர பணிகள் நீண்டகாலம் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய திட்டமிடலுடன் முறைப்படுத்தப்பட்ட நிர்வாக அலகுடன் தேவைப்படும் இடங்களெல்லாம் நிறுவுதல்.
- விடுதலைக்காக போராடும் இனங்களையும், மனிதாபிமானப்போக்குடைய சக்திகளையும், ஒன்றிணைத்து 4ம் உலகொன்றை கட்டியெழுப்புதல். இதன் நோக்கம் இன்றைய புதிய பூகோள அரசியலை மதிநுட்பமாக எதிர் திசையில் நின்று உறுதியுடன் எதிர்கொள்வதும் அடக்குறையாளர்களுக்கு எதிராக அனைத்துலகரீதியில் “அகில அதிர்வு” ஒன்றை ஏற்படுத்துதல்.
- TEFP மற்றும் TENA யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்தல்.
- தமிழீழத்தின் தலைமைச்செயலகத்தை நிறுவுதல் இச் செயலகத்தில் தமிழீழத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த அனைத்து துறைசார்ந்த கட்டுமானங்களின் பிரதிபலிப்புகளும் உள்ளடக்கப்படவேண்டும்.
- தமிழீழத் தூதரங்களை நாடுகள் தோறும் நிறுவுதல்.
- தமிழீழ பேராவாவை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழீழ கடவுச்சீட்டு மற்றும் ஆள்அடையாள அட்டைகள் உருவாக்கப்படவேண்டும்.
- தமிழீழவங்கியை மீள் உருவாக்கல்.
- தமிழீழத்தின் நட்பு நாடுகளை இனங்கண்டு ஆதரித்து இராசதந்திர உறுவுகளை வளர்த்து ஒன்றிணைந்து செயற்படல்.
- நாடுகளுக்கிடையேயான சந்திப்புக்கள் மற்றும் தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல்.
- சர்வதேச தொண்டர் நிறுவனங்கள், மற்றும் அரச அரசசார்பற்ற கட்டமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், அரசியல் கட்சிகள் ஆகியோருடன் தொடர்பாடல்களை வைத்திருத்தல்.
- வெகுசனப் போராட்டங்களை மேற்கொள்ளுதல், உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களுடன் தொடர்பாடல்களை வைத்திருத்தல்
- ரோப்பிய ஒன்றியம் மற்று ஐக்கிய நாடுகள் சபையையுடன் சுமுகமான தொடர்புகளை மேற்கொண்டு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
- தற்போதைய நிலைப்பாடுகளை ஒன்றுதிரட்டி அதனை ஆய்வுக்குட்படுத்தி அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்துதல்.
- தொடர்ச்சியான தொடர்புகளை தவணை முறைகளை வரையறுத்து தேவையான விடயங்களை ஒன்றுசேர்த்து நடைமுறைப்படுத்தல்.
- தமிழினவழிப்பின் காரணமாக சிதைவுற்றிருக்கும் தமிழீழ தேசத்தையும், தமிழீழ மக்களையும் மேம்படுத்துதல்.




