ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடர் கடந்த 13.09.2021 அன்று ஆரம்பமாகி 08.10.2021 திகதி வரை இடம்பெற்றது. தொடரும் தமிழின அழிப்பை மூடிமறைத்து, சிறீலங்கா அரசினை அனைத்து விசாரணைப்
பொறிமுறைகளிலுமிருந்து தப்ப வைக்கவும், சிறீலங்கா அரசும், அதன் ஆதரவாளர்களும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் சூழலில் இக்கூட்டத்தொடரும் முக்கியமானதாக அமைந்தது. கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இணையவழி ஊடாக இடம்பெற்ற இக்கூட்டத்தொடரில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக தாயகம்,தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து சிவில்,சமூக,அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட தரப்பினரும் இணைந்து தமிழீழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினைக் கோரி மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் காணொளி ஊடாக உரையாற்றியிருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 46வது கூட்டத்தொடரில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் பிரித்தானியா தலையிலான இணைத்தலைமை நாடுகளினால் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் அடிப்படையில் 5வது தடவையாகவும் சிறீலங்கா அரசிற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அவர்கள் இக் கூட்டத்தொடரில் வழங்கிய வாய்மூல அறிக்கையில் தமிழருக்கு சாதகமானதாக எந்தவொரு விடயமும் காணப்படவில்லை.
ஆணையாளரின் அறிக்கைகள் பலமானதாக அமையவேண்டுமாக இருந்தால் ஐ.நா வின் அனைத்து பொறிமுறைகளையும் சரியான வகையில் உள்வாங்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்புகள் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்த அமைப்புகள் (treaty bodies) ஆகியவற்றிற்கு தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் முறைப்பாட்டு அறிக்கைகளை அனுப்பிவைக்க வேண்டும்.ஏனெனில் ஆணையாளரின் அறிக்கைக்கான தரவுகள் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்த அமைபுக்களின் பிரதிநிதிகளின் அறிக்கைகளிலிருந்தே திரட்டப்படுகின்றன. அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் 46வது கூட்டத்தொடரில் வெளிவந்த ஆணையாளரின் அறிக்கை தமிழர்களான எமக்கு சற்று ஆறுதலாக அமைந்திருந்தது. அதில் ஐ.நா வின் அறிக்கைகளில் தமிழ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதுடன் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு காரணம் கடந்த வருடம் முழுவதும் ஈழத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய வன்முறைகள் தொடர்பில் 350 இற்கும் மேற்பட்ட தனிப்பட்ட முறைபாடுகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பெற்று உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளினூடாக மேலே குறிப்பிட்ட பொறிமுறைகளில் வழக்குகளாக பதிவுசெய்ததே ஆகும். மேலும் சிறப்பம்சமாக எமது பிரச்சினை தொடர்பில் முதன்முறையாக ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த பெப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை நாம் பலதடவைகள் எடுத்துக்கூறியும் தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினரிடம் இருந்தும் எவ்வித அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சிங்களம் மற்றும் முஸ்லிம் தரப்பினரால் வழமைபோன்று பல அறிக்கைகள் ஐ.நா பொறிமுறைக்குள் தொடர்ந்தும் பதிவேற்றப்பட்டுக் கொண்ருக்கின்றன.
அந்தவகையில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த வருடம் மட்டும் இதுவரை 80 எழுத்துமூல அறிக்கைகளினை ஐ.நா விற்கு வழங்கி இருக்கின்றோம். இக் கூட்டத்தொடரில் 27 எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தோம். அதில்
தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த வரவேண்டுமென உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற, 60 மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 192 சர்வதேச அமைப்புக்களும், உலகளாவிய ரீதியில் இயங்குகின்ற 7000 இற்கு மேற்பட்ட பொது அமைப்புக்களும் கூட்டாக ஒன்றிணைந்து ஓர் எழுத்து மூல அறிக்கையை சமர்த்திருந்தோம்.
அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளோம்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்
மேலும் கடந்த கூட்டத்தொடர்களினைப் போன்று இதிலும் உலகளாவிய ரீதியில் தமிழர்களை ஒருங்கிணைத்து 25 வாய்மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தோம். அதில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பிலும், தொடர்ந்து இடம்பெறும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு தொடர்பிலும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன்
இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தவும், பன்னாட்டு குற்றவியல் நடுவர்மன்றத்தில் சிறீலங்காவை நிறுத்த வேண்டும், ஐ.நா பொதுச் சபையின் 4 வது குழுவில் தமிழீழத்தை ஆக்கிரமிப்புக்கு கீழ் இருக்கும் சுயநிர்ணய உரிமை பறிபோன நாடாக அங்கீகரிக்க வேண்டும். அதாவது
ஐ.நா பொதுச்சபையின் நான்காவது செயற்குழு (fourth committee) அல்லது காலனித்துவத்திலிருந்து வெளியேற்றும் சிறப்பு செயற்குழுவில்(special committee on decolonization) தமிழீழத்தையும் ஒரு நாடாக இணைக்க வேண்டும். மேலும்
இலங்கையில் நடப்பதை கண்காணிக்கவும் உலக நாடுகளுக்கு அறிக்கை அனுப்பவும் இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என பல கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.
தற்பொழுது இலங்கை பிரச்சினை பிரிவு -2 கீழ் மட்டுமே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகத் தமிழர் இயக்கம் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற இணை அமைப்புகளுடன் இணைந்து கடந்த ஏழு வருடங்களாக இலங்கைப் பிரச்சினையை பிரிவு 4 இற்குள்ளும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.பிரிவு 4 என்பது மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் தொடர்பாக மனித உரிமை பிரச்சினைகள் உள்ள நாடுகள் சார்ந்து விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது அவரினால் அந் நாடு தொடர்பாக ஆய்வு அறிக்கைகள் சமர்க்கிப்பட்டு விவாதத்திற்கு உள்ளாக்கப்படும். இப்பிரிவின் கீழ் தற்போது ஐந்து நாடுகள் உள்ளன. இதனை நாம் வாய்மூல மற்றும் எழுத்து மூல அறிக்கைகளாக ஐ. நா. மனித உரிமை பிரதான அவையிலே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு பன்னாடுகளுக்கும் எடுத்துக்கூறி வருகின்றோம்.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 18 அறிக்கையாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் நேரடியாகவும் இணையவழி ஊடாகவும் சந்திப்புக்களையும் மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைகள், அதற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தோம்.
இச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச அரங்கில் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக தக்கவைத்துள்ளோம்.
தனியே ஐ.நா வில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது அல்லது விவாதிக்கப்படும் போது அதற்குரிய காலவரையறை முடிந்த பின்னர் அறிக்கைகள் அனுப்புகிறோம் என ஊடகச் செய்தியாக்குவது அல்லது முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விமர்சகர்களாக ஊடகங்களில் கருத்துக்கள் சொல்லவதனால் எதனையும் சாதிக்க முடியாது. என்பதை விளங்கிக்கொண்டு சரியான வகையில் பொறிமுறைகளை உள்வாங்கி ஐ.நா.வின் அனைத்து பொறிமுறைகளிலும் நான் பெரிது நீ பெரிது என விவாதித்துக் கொண்டிருக்காமல் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே எமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
அந்தவகையில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 28 தொடங்கி மார்ச் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை வெளிவரவுள்ளது. அத்துடன் ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) 21 பேர் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அதாவது ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் (UN Independent expert), ஐ.நா செயற்குழு உறுப்பினர்கள்(UN working Group members) ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் (UN special rapporteur) போன்ற வகையினரை ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) என கூறுவார்கள். இவர்களுடைய அறிக்கைகள் தமிழர்களின் இன அழிப்பு குறித்தும் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அமைய வேண்டுமாக இருந்தால் தமிழ் சிவில் சமூக அமைபுக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் என அனைவரும் பாதிப்புக்கள் மற்றும் கோரிக்கைகளை தனித்தனியாக அதிகமான எண்ணிக்கையில் எதிர்வரும் டிசம்பர் 20 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். அதேபோன்று 49வது கூட்டத்தொடருக்கான எழுத்துமூல அறிக்கைகளினை யனவரி 20 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். இவ் எழுத்துமூல அறிக்கைகள் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற( ECOSOC) அமைப்புகளின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே கூட்டத்தொடரின் உத்தியோகபூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். அதனடிப்படையில் மனித உரிமைகள் தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற( ECOSOC) அமைப்புகளின் ஊடாக சமர்ப்ப்பிப்பதற்கு எம்முடன் தொடர்புகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர் இயக்கமாக நாம் எச் சந்தர்ப்பத்திலும் எம் தாய்த் தமிழ் உறவுகளுடன் கைகோர்த்து நிற்ப்போம் என்பதையும், சர்வதேச அரங்குகளில் தமிழர்களின் குரலாக தமிழீழ மக்களின் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு சமரசமற்று எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்போம் என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”












