தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த வரவேண்டுமென உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற, 60 மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 192 சர்வதேச அமைப்புக்களும், உலகளாவிய ரீதியில் இயங்குகின்ற 7000 இற்கு மேற்பட்ட பொது அமைப்புக்களும் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த ஓகஸ்ட் மாதம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, 14.09.2021 அன்று அவ் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளோம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்
அவ் அறிக்கையின் சாராம்சம் :
ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமை வேண்டி
போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.
70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.
ஐ.நா.வின் 10 விசேடப் பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021லே இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.
மேலும் ஐ.நா வின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் அவர்களும் போர் முடிந்தும் 12 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.
இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :
– பெப்ரவரி 10 2015ல் வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
– ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1ன் தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.
– பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை என்பதை வலியுறுத்தியதுடன் சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.
– தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.
– விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :
– வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.
– எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.
ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :
– தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.
– நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து, நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து, சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.
இவ்வாறாக அவ்வறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.
இதேபோன்று கடந்த2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரின் போதும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் அங்கீகாரத்துடனும் 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகள் ஐ.நா சபைக்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.
குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால், இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது, ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.
இத்தருணத்தில் இவ் அறிக்கையினை
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களிற்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 👇
https://drive.google.com/file/d/1ZYbdzvxnQJDjiAe2CLEMF0fO8Y9qqEf5/view?usp=sharing


















