ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!!
தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய செயற்பாடுகளில் ஒரு கட்டமாக கடந்த யனவரி மாதத்தில் இருந்து உலகத் தமிழர் இயக்கம் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றில் சிறீலங்கா அரசிற்கு எதிராக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துவந்திருந்தது.
அதனடிப்படையில் உலகத் தமிழர் இயக்கத்துடன் கூட்டாக இணைந்து பயணிக்கும் அமைப்புகளினால் கடந்தகாலங்களில் ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய பன்னாட்டு இராசதந்திர தளங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளினை முன்னுதாரணமாக அனுப்பிவைத்ததன் விளைவாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தெற்காசியாவிற்கான பொறுப்பாளர்கள் குறிப்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் PPE கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைக்கான குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் உலகத் தமிழர் இயக்கத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கான வரைபினையும் உலகத் தமிழர் இயக்கத்தினருடன் கோரியிருந்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு PPE கட்சியைச் சேர்ந்த 28 பாராளுமன்ற உறுபினர்கள் தீர்மானத்திற்கான முன்மொழிவினை 08 யூன் 2021 அன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். அந்தவகையில் அந்த தீர்மான முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு 10 யூன் 2021 அன்று இடம்பெற்ற வாக்களிப்பில் 705 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர் இதில் 628 பாராளுமன்ற உறுப்பினர்கள் இத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி உலகத் தமிழர் இயக்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளின் முன்னேற்றமாகவே இத் தீர்மானம் அமைந்துள்ளது. இத் தீர்மானம் ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை முழுமையாக பிரதிபலிக்காத போதும் எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இத் தீர்மானத்தினை தமிழின அழிப்பிற்கு எதிரான நீதியை நோக்கிய பயணத்தில் ஓர் முன்னகர்வாக எடுத்துகொள்ளலாம். இத் தீர்மானத்தினை நிறைவேற்றியதற்கும் மற்றும் எமது பிரதான கோரிக்கைகளினையும் அவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் அனைத்து தமிழ் அமைப்புகளும்,உறுப்பினர்களும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கிய செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர்களின் நீதிக்கான கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் எமது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்போம், அதற்காக ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய பன்னாட்டு அரசியற் தளங்களில் இணைந்து செயற்படுவதற்கு உலகத் தமிழர்களுக்கு அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.
– தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் –
10.06.2021 – ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானம்
TA-9-2021-0290_EN (2) – தீர்மானம்











