தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூறும் இன்றைய நாளில் தமிழருக்கெதிரான இவ் நூற்றாண்டின் பாரிய இனவழிப்புப் போர் நடந்தேறி 11 வருடங்கள் ஆகிய நிலையில் எமது மக்களின் முழுமையான இன விடுதலைக்கான போராட்டத்தினை தமிழர் நாம் ஓர் தேசமாக இணைந்து வலுவாக முன் நகர்த்தவேண்டிய வரலாற்றுக் கடமை எம் முன் சவாலாக விரிந்து நின்கின்றது.
2009 இல் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போரின் போது “யுத்த தவிர்ப்பு வலயங்கள்” என அறிவிக்கப்பட்ட பகுதியில் தமக்குப் பாதுகாப்பு கிடைக்கும் எனத் தேடிச் சென்ற பொதுமக்கள் அங்கு தமிழர் என்ற ஒரே காரணத்தினால் திட்டமிட்டு கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். போர் முடிவுக்கு வந்தபோது சிறீலங்கா அரச படைகளிடம் சரணடைந்த பெருந்தொகையானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை. மகாவம்ச சிந்தனையின் அடிப்படையில் இராணுவ அணுகுமுறையின் ஊடாக அனைத்தையும் அணுகும் சிறீலங்கா இனவழிப்பு அரசாங்கம் தாம் இழைத்த குற்றங்களுக்கு எச் சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறப்போவதில்லை. போர்க் குற்றவாளிகள் என ஐ.நா. வினாலும் சர்வதேசத்தினாலும் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளுக்கு நியமித்து வருகின்ற பேரினவாத சிறீலங்கா இனழிப்பு அரசின் சனாதிபதி அண்மைய கொரோனா கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கூட இராணுவ அதிகாரி ஒருவரையே நியமித்திருந்தார். அனைத்தும் இராணுவமயமாக்கப்பட்டு அவ் அடக்குமுறைக்குள் திட்டமிட்டபடி கட்டமைப்பு சார் தமிழின அழிப்பு இன்றும் தொடர்கின்றது. இவற்றையெல்லாம் சர்வதேச சமூகம் மெளனமாகவே வேடிக்கை பார்க்கின்றது.
இவ்வாறனதொரு சூழலலில் பல இலட்சம் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த பெளத்த பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசிற்கெதிராக நாம் தொடர்ந்தும் அனைத்துலக அரங்கில் நீதிக்காக போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். தமிழின அழிப்புப் போரால் பாதிக்கப்பட்ட எம் மக்களின் வாழ்வியலை மீள்கட்டியெழுப்பும் சமபொழுதில் முள்ளிவாய்க்காலில் வடிந்தோடிய குருதியின் நீதிக்கான சக்தியாக ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழீழத்தின் இறையாண்மையையும் பன்னாட்டு அரங்கிலே இடித்துரைக்க வேண்டும்.
எம்மைப் போன்று அடக்குமுறைக்கு எதிராக போராடும் பிற இன மக்களோடு கைகோர்த்து நாம் பன்னாட்டு அரங்கிலே அநீதிக்கெதிரான மாபெரும் அணியாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும். ஆயுதம் தாங்கிய எமது போராட்டம் எவ்வாறு ஏனைய விடுதலைப் போராட்டங்களிற்கு முன் உதாரணமாக விளங்கியதோ, அதே போன்று எமது அரசியல் , அரசதந்திர போராட்டமும் உத்வேகத்துடன் ஏனைய போராட்டங்களிற்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும்.
வேறொரு முள்ளிவாய்க்கால் உலகில் எவ்வினத்தவருக்கும் நிகழக் கூடாது என்ற பன்னாடுகள் தழுவிய ஓர் ஒருங்கிணைவு தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை கடந்த நந்திக்கடல் கோட்பாடாய் புற்றுயிர்க்க வேண்டும்.
2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு நிகழ்ந்து 11 வருடங்கள் ஆகின்ற இவ் ஆண்டிலாவது நாம் விட்ட தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்று “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி எமது இனத்தின் ஒருமித்த கூட்டு இலக்குகளிற்காக ஒரு பொதுக் கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணி சிந்தித்துச் செயற்பட வேண்டும்.காலத்துடன் ஒன்றிய செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச் செயற்படவேண்டும். ஓர் தலைமுறை மாற்றமும், போராட்ட வடிவ மாற்றமும் தேவை என்பதை களத்திலும், புலத்திலும் உள்ள தலைமைகள் உணர்ந்து இளையோர்களிற்கு வழிவிட வேண்டும். ஏனெனில் அவர்களே எம் இனத்தின் எதிர்காலம். அதுவே முள்ளிவாய்க்காலில் வீரச்சாவும் மாணச்சாவுமேந்தியவர்களிற்கு நாம் செய்யும் சரியான காணிக்கையாக இருக்கும். அநீதியையும், துரோகத்தையும் உட்கொண்டு, இனமொன்றின் சாவை அடைகாத்து தினம் தினம் கொதிக்கும் முள்ளிவாய்க்கால் இளந் தலைமுறை ஒன்றின் அற எழுச்சிக்காய் ஏக்கத்தோடு காத்திருக்கின்றது. விருட்சத்தின் விதையாய் எத்தனையோ உறவுகள் மண்ணில் புதையுண்டிருப்பினும் அவர்கள் நாளை மரமாய் மீண்டும் எழுவார்கள்.
18.05.2020 – May 18 ஊடக அறிக்கை









