மனித உரிமைகள் சபைக்குள் நிலவும் நிகழ்காலச் சூழல்
புதிதாக பதவியேற்ற சபையின் ஆணையாளர் தனது கன்னியுரையில் சிறீலங்காவில் நம்பிக்கை தரக்கூடிய முன்னேற்றங்கள் இடம்பெறுவதாக புகழாரம் சூட்டியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான அலுவலகம் தனது நிர்வாகத்திறனுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் கொத்துக்குண்டுகளிற்கெதிரான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாடுகளிற்கான 2019ம் வருடத்திற்கான தலைமைத்துவத்தை, அதே கொத்துக்குண்டுகளைப் பிரயோகித்து தமிழினப்படுகொலை புரிந்த சிறீலங்கா அரசு தலைமையேற்றுள்ளது.
எனினும் கடந்த மார்ச் மாதமே இலங்கை இவ் உடன்படிக்கையில் கைச்சாத்துட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அவசர அவசரமாக எதிர்வரும் ஆண்டிற்கான இத்தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?
இச் செயற்பாடுகள் யாவற்றிற்கும் கிரீடம் வைக்கும் செயலாக; சுவிஸின் நீதியமைச்சர் Simonetta Sommaruga அவர்கள் இலங்கை சென்று, சிறீலங்கா அரசின், சர்வதேசத்தையும் குறிப்பாக தமிழர்களையும் ஏமாற்றும் வித்தைகளான; நிலைமாறுகால நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் மற்றும் அரசியல் யாப்புமாற்றம் போன்றவற்றை வரவேற்று வாழ்த்து புகழாரம் சூட்டியுள்ளதுடன், அகதிகள் சார்ந்த கூட்டாண்மை எனும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளார். இதன் பிரகாரம் பல தமிழர்கள் சுவிஸிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கொத்துக்குண்டுகளிற்கெதிரான அவையின் தலைமைத்துவத்தை சிறீலங்காவிற்கு வழங்கியதை சுவிஸ் மற்றும், பிரித்தானியா நாடுகள் வாழ்த்தி வரவேற்றுள்ளது.
இச் சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 2009 சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகின்றது. இத்தருவாயில் அமெரிக்காவை தொடர்ந்து இலங்கை சார்ந்த பிரேரணையை பிரித்தானியா தலைமையேற்கவுள்ளது. தமிழர் தரப்பை பொறுத்தவரைக்கும் இம் 39 வது கூட்டத்தொடரானது சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய கூட்டத்தொடராகும். எனினும் தமிழரின் குரலை ஒடுக்கும் வகையில் தமிழீழத்திலிருந்து ஐ.நா மனிதவுரிமைகள் சபைக்கு வரவிருந்த பாதிக்கப்பட்ட உறவுகள், தமிழ் உரிமை ஆர்வலர்களின் விசா அனுமதியை சுவிஸ் அரசாங்கம் நயவஞ்சகமாக மறுத்துள்ளதுடன் சர்வதேச அரங்கில் சிறீலங்கா இனவழிப்பு அரசை காப்பாற்றுவதற்கு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
எம்மைப்போன்ற போராடும் இனங்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள் போன்றவற்றுடனான கூட்டிணைவொன்றை தமிழர் இயக்கம் பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கியது. இக் கூட்டிணைவை இல்லாதொழிக்க சிறீலங்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் முகவர்கள் தீவீரமாக செயற்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக ஐ.நா மனிதவுரிமைகள் சபையில் எமது பணிகள் பலவழிகளிலும் முடக்கப்பட்டு வருகிறது.
பல சதிவலைப் பின்னல்களுக்கு மத்தியிலும் தமிழீழ விடுதலைக்கான பணிகள் பல சவால்களை எதிர் நோக்கும் நிலையில் இவற்றை முறியடித்து முன் நகர்த்திச் செல்லும் கடப்பாடு தமிழர் இயக்கத்தின் முன்னால் பரந்துகிடக்கிறது.





