யார் தமிழர் இயக்கம்

தமிழர் இயக்கம்

தமிழர்கள் இப்பூகோளத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து வியாபித்து வாழ்கின்றார்கள் . இற்றைக்கு ஐம்பாதியிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையும் பெருமையும் வாய்ந்த தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும் விழுமியங்களையும் கொண்ட அறிவியலையும் வீரத்தையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டி முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி அற்பணம் செய்த இவ்வுயரிய இனம் இன்று உலகெங்கும் அகதியாக அடிமையாக ஏதுமற்ற ஏதிலிகளாக நாடோடிகளாக வேரறுந்து இனக்கலப்படமடைந்து வாழ்கின்றது. பௌத்த பேரினவாத சக்திகளின் கொள்கைகளினாலும், காலனித்துவ அடக்குமுறையாளர்களினாலும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஏதிலிகளாக்கப்பட்டார்கள். இன்றும் உலகின் பல பாகங்களில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள். திட்டமிட்ட வடிவமைக்கப்பட்ட ஓர் இனவழிப்பிற்கும் உள்ளாகப்படுகின்றார்கள். தமிழர் தாயகமான தமிழீழத்தில் 2009 வரை இடம்பெற்றதும் அதனைத்தொடர்ந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சிபீடமேறிய சிங்கள அரசுகளால் மேற்கொள்ளபடுவது திட்டமிட்ட தமிழின அழிப்பேயாகும். இதுவே எமது நிலைப்பாடாகும்.

தமிழீழம் என்பது இன்றைய பூகோள அரசியல் ஒழுங்கில் தமிழகத்திற்கு அடுத்ததான தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்று மரபுவந்த தாயகமாகும். இத்தகைய பெறுமதிமிக்க உன்னதமான உயரிய எம் தாயகத்தை அன்னிய சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எமது பேரம்பேசும் சக்தியையும் இறையாண்மையையும் கட்டியமைத்து நிர்வாகம் செய்த எம் தமீழீழ நிகழ்நிலையான அரசை தமது பூகோள நலன்களுக்காக பிராந்திய நாடுகளும் வல்லரசுகளும் அழிக்க திட்டமிட்டார்கள். இலங்கைத்தீவில் தமது நலன்களுக்கேற்ப ஒற்றை ஆட்சியை அமைத்து தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை இல்லாமல் செய்யவே பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசுகளும் இன்னும்பல நாடுகளும் தமது நலன்களுக்காக சிங்கள பேரினவாத அரசிற்கு முண்டுகொடுத்து போட்டி போட்டு தமிழர்களை அழித்து எம் கட்டுமானங்களை சிதைத்தார்கள். மேலும் தாய்த்தமிழகத்திலும் தமிழர்களை அடக்கியொடுக்குவது இன்று நாளாந்த நடவடிக்கையாகிவிட்டது .

திட்டமிட்ட இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட எமது தமிழீழத்தின் இறையாண்மையை பேரம்பேசுதலுக்கிடமற்ற எமது தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாக மீட்டெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுதலும் உலகெங்கும் பரந்துவாழும் 12 கோடி தமிழர்களின் உரிமைகளுக்காக வினைத்திறனுடன் போராடுவதே எமது உயரிய நோக்கமாகும்.

எமது கொள்கை

தமிழீழம் சார்ந்த நிலைப்பாடு

தேசிய அரசாக விளையும் சக்தி (aspiring nation – state) என்ற அடிப்படையில் நாம் இலங்கைத்தீவில் இரண்டு தேசங்களுக்கிடையேயான ஒரு தீர்வை முன்மொழியுமாறு சர்வதேச சமூகத்தைக் கோரலாமே அன்றி நாமாக சமஷ்டி என்றோ, அதிகாரப்பகிர்வு என்றோ அல்லது தெளிவற்ற கோட்பாடுகளை முன்வைத்தோ கொள்கைப்பிரகடனம் செய்வது பொருத்தமற்றது. இறைமையும் சுதந்திரமும் பொருந்திய தனியரசே தமிழரின் அரசியல் வேணவா. இதுவே தமிழர் விரும்பும் தீர்வு . இந்த வேணவாவிற்கு முரணான தீர்வுத்திட்டத்தை தாயகத்தில் எமது அரசியற்கட்சிகள் முன்வைக்கவேண்டிய அவசியம் உண்மையில் இல்லை. ஆனால் தமிழர்கள் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்ற நிர்பபந்தம் இருக்கிறதென்றால் எவ்வாறானதொரு திட்டத்தை முன்வைக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசியம் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் முழுமையான சுயநிரண்ய உரிமையை அங்கீகரித்த நிலையில் இரண்டு தேசியங்கள் தத்தமக்கேயுரித்தான முழுமையான இறைமையைச் சம தகுதியுடன் பேணக்கூடிய ஒரு தீர்வு முறையைப் பற்றியே குறைந்தபட்சமாக நாம் கருத்து முன்வைக்கலாம். எமது குறைந்தபட்சத் தீர்வாக தமிழ் இறைமையைச் சரணாகதியாக்காத இரண்டு அரசுகளின் கூட்டுமுறை (confederacy) பற்றியே கருத்து முன்வைக்கலாம். சமஷ்டி (federation) என்பது வேறு அரசுகளின் கூட்டு (confederation) என்பது வேறு தனிநாடு என்பதற்குக் குறைந்த படியாக அரசுகளின் கூட்டு என்பதை ஒரு திட்டவட்டமான வடிவமாக தமிழ் இறைமையைச் சமரசம் செய்யாததாக அமைகிறது. அதனிலும் குறைந்ததாகவே சமஷ்டியின் ஏனைய வடிவங்கள் அமையும்.

எனவே நாமாகத் தீர்வுத்திட்டம் எதையும் வரையவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது இரண்டு அரகளின் கூட்டுவடிவமான(confederation) முறையாகவே அமைவது பொருத்தம்.

இலங்கைத் தீவிலுள்ள 18 மில்லியன் சிங்களவர்களின் புவிசார் அரசியல் (geopolitics) தமிழர்களின் மெய்நடப்பு அரசை (de facto state) அழித்துவிட்டது . அதற்கு முன்னைய இரணுவப் பலச்சமநிலையை இனிமேலும் நாம் மீண்டும் அடைய முடியுமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த நிலையில்தான் தென்னாசியப் பிராந்தியத்தில் 80 மில்லியன் தமிழர்களின் நாடித்துடிப்பும் ஒரேவிதமாகேவ துடிக்கிறது என்ற உண்மையை உணர்ந்த அரசியலை நாம் கட்டியெழுப்பவேண்டும் ஈழத்தமிழ் இறைமையின் மெய்நடப்பு அரசு தனது நிலப்பரப்பை அங்குலம் அங்குலமாய் இழந்து உலகத்தமிழரின் மனப்பரப்பினை கைப்பற்றியதன் விளைவினால் இந்தப் புதிய பரிமாணம் தோன்றியுள்ளது. இந்த பரிமாணத்தில் புதியதொரு மெய்நடப்பு நிலைமையை நிறுவி தமிழ் புவிசார் அரசியலூடாக (Tamil geopolitics) ஈழத்தமிழரின் இறைமைப் போராட்டத்திற்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும். தாயகத்திலும் சரி புலத்திலும் சரி உலகத்தமிழர் மட்டத்திலும் சரி புதிய தலைமுறையின் அரசியல்வரவே இதை உறுதி செய்யும். தாயகத்தில் குழம்பியிருக்கும் மூத்த அரசியல்வாதிகளும், புலத்தில் இலக்கின்றி பயணிக்கும் குழுவாத சக்திகளும், தமிழகத்தில் வெறுமனே தீரமானங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் இயக்கத்தலைவர்களும் தலைமுறை மாற்றத்திற்கான காலம் வந்துவிடட்டதை அங்கீகரித்துச்செயற்படவேண்டும். „கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடமிருந்தே உலக ஒழுங்கை மாற்றும் அடிப்படைத் தத்துவங்கள் உருவான்றன“.